கேரளாவில் அதிர்ச்சி! 5 மற்றும் 3 வயது குழந்தைகள் உயிரிழப்பு – தாய் கைது... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

கேரளாவில் அதிர்ச்சி! 5 மற்றும் 3 வயது குழந்தைகள் உயிரிழப்பு – தாய் கைது...

 


இந்தியாவின் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை அருகே மேனோன்பாறை கூராங்காடு பகுதியில் 5 வயது மகளும் 3 வயது மகனும் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர்களின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜான் குமார் (36) என்பவரும் அவரது மனைவி நிவேத்யா (29) என்பவரும் குறித்த பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெனிபர் ஜூலியட் (5) மற்றும் ராபின் கிறிஸ்டோபர் (3) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர். ஜெனிபர் ஜூலியட் அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் எல்.கே.ஜி. கல்வி கற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதி இரு குழந்தைகளும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், பின்னர் குளியலறையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கிய நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, குழந்தைகள் தவறுதலாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துவிட்டதாகக் கூறி நிவேத்யா சத்தமிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று குழந்தைகளை மீட்டு தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், குழந்தைகளை பரிசோதித்த வைத்தியர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரு குழந்தைகளும் தவறுதலாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என கொழிஞ்சாம்பாறை பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் குழந்தைகளின் தாய் நிவேத்யாவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, அவரது பதில்களில் முரண்பாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பொலிஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த விசாரணையின்போது, நிவேத்யாவுக்கு ஒருவருடன் ஏற்பட்டதாகக் கூறப்படும் தொடர்பு தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகள் தனது தனிப்பட்ட உறவுக்கு இடையூறாக இருப்பதாக கருதி அவர்களை கொலை செய்ததாக நிவேத்யா விசாரணையில் தெரிவித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தன்று ஜான் குமார் வேலைக்குச் சென்ற பின்னர், வீட்டில் இருந்த இரு குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்ததாக நிவேத்யா ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவத்தை மறைப்பதற்காக குழந்தைகள் தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததாக நாடகமாடியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதையடுத்து நிவேத்யாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் நபருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு சிறு குழந்தைகள் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Lanka Theepam